சிதம்பரம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
- 5-ம் வகுப்பு மாணவி கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார்.
- சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் வசித்து வருபவர் தீபா. இவரது 10 வயதுடைய மகள் அங்குள்ள ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார். வழக்கம் போல கடந்த 3-ந் தேதியன்று மாலையில் டியுஷனுக்கு 5-ம் வகுப்பு மாணவி சென்றார். அங்கு படித்துக் கொண்டிருந்த போது சீறுநீர் கழிக்க அந்த வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த டியுஷன் மாஸ்டரின் தந்தை தீயணைப்புத் துறையில் இருந்து ஒய்வு பெற்ற தர்மலிங்கம் (வயது 65), சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தர்மலிங்கம் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.