அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியது
- 10 நாட்கள் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெற உள்ளது.
- பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற உள்ளன.
கோவை,
கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணி வகுப்பு குறித்து ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது.
இந்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இன்று முதல் வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த புகைப்படக் கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டு மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற உள்ளன.
இப்புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளை கொண்டு கலைநிகழ்ச்சிகளும், கலைப்பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.