கோவையில் நூல் வியாபாரி வீட்டில் முகமூடி கொள்ளை
- சுமதி வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மர்மநபரின் கைரேகைகளை பதிவுசெய்தனர்.
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன். நூல் வியாபாரி. இவரது மனைவி சுமதி (வயது 52). இவர்களுக்கு லாவண்யா, ஸ்ரீமது மிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதி ரூ.2.33 லட்சத்துக்கு வைர நெக்லஸ் வாங்கினார். இதனை அவர் வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று சுமதியின் மூத்த மகள் கிருஷ்ணகிரியில் இருந்து தாய் வீட்டிற்கு வந்தார். தனது மகளிடம் அவரது தாய் புதிதாக வாங்கி வைத்து இருந்த வைர நெக்லசை காட்டுவதற்காக அறையில் உள்ள பீரோவை திறந்தார்.
அப்போது அதில் இருந்த கல் பதித்த நெக்லஸ், தங்க நெக்லஸ், செயின், கம்மல், மோதிரம், ஆரம் வளையல் மற்றும் புதிதாக வாங்கிய வைர நெக்லஸ் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனை பார்த்து சுமதி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த மர்மநபர் முதல் மாடிக்கு சென்று அங்குள்ள கண்ணாடி கதவின் வழியாக உள்ளே நுழைந்தார்.
தொடர்ந்து அவர் கீழே சுமதி மற்றும் அவரது மகள் ஸ்ரீமதுமிதா ஆகியோர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த அறைக்கு சென்றார். பின்னர் அந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.2.33 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் 28 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து சுமதி பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவுசெய்தனர்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த தங்கம் வைர நகைளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகிறார்கள்.