உள்ளூர் செய்திகள்

ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி

Published On 2022-07-26 10:24 GMT   |   Update On 2022-07-26 10:24 GMT
  • சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலியானது
  • வனத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் ஊட்டி அருகே மந்தடா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் நீலகிரி வடக்கு வனச்சரக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்கா ராம் போஸ்லே, உதவி வன அலுவலர் சரவணன் மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பி வைக்கப்பட்ட இடம் மற்றும் மர்ம நபர்களை தேடும் பணி முடக்கி விடுபட்டு உள்ளது. இந்தநிலையில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தவும் வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி இன்று (நேற்று) சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

பொதுவாக விவசாய நிலங்களில், காட்டுப்பன்றி, முயல் உட்பட விலங்குகள், பயிரை நாசப்படுத்துவதை தவிர்க்க, சுருக்கு வேலிகளை அமைத்து உள்ளனர். மேலும் வேட்டைக்காகவும் சுருக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரோ வைத்த சுருக்கில், சிறுத்தையின் வயிற்றுப்பகுதி சிக்கியுள்ளது. விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

இந்த நிலையில் சிறுத்தை இறந்து கிடந்த இடத்தின் அருகே மான் ஒன்று இறந்த நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தை மற்றும் மானின் உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இறந்த சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

Tags:    

Similar News