பாளையில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
- போராட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஜோதிபுரம் திடலில் இன்று நடைபெற்றது.
இதற்கு அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் பகவதியப்பன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அரசு அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையினை உடனுக்குடன் தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாநகராட்சிகளில் பணியிடங்களை குறைத்திட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. முடிவில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மெல்வின் விக்டர் நன்றி கூறினார்.