உள்ளூர் செய்திகள்

வலையில் சிக்கிய கைத்துப்பாக்கியை படத்தில் காணலாம்.

தென்பெண்ணையாற்றில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் விரித்த வலையில் சிக்கிய கைத்துப்பாக்கி

Published On 2023-08-06 08:05 GMT   |   Update On 2023-08-06 08:05 GMT
  • புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம்.
  • ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாறு உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகவும், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடலூருக்கு வந்து செல்வதற்காகவும் புதுவை மாநில அரசால் தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகளவில் வலை விரித்தும், தூண்டில் போட்டும் மீன்களை பிடிப்பார்கள். அதன்படி கடலூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் இன்று தரைப்பாலம் அருகே மீன்களை பிடிக்க வலை விரித்தனர். சிறிது நேரம் கழித்து வலையை மேலே எடுத்தனர். வலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை பார்த்த சிறுவர்கள், பொம்மை துப்பாக்கி என நினைத்து கையில் எடுத்து சென்றனர்.

அப்போது தரைப்பாலத்தில் சென்ற ஒருவர், சிறுவர்களிடமிருந்து இதனை வாங்கி பார்த்தார். இதையெல்லாம் நீங்கள் வைத்திருக்க கூடாது, பெரியவர்களிடம் தான் இருக்க வேண்டுமென கூறி வாங்கி சென்றுள்ளார். இதனால் குழப்பமடைந்த சிறுவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரில் பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து கூறினார்கள். உடனடியாக தரைப்பாலத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை வழிமறித்து, அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனைக் கண்ட போலீசார், இது ஒரு வகையான ஏர் பிஸ்டல் என்பதை உறுதி செய்தனர். இந்த கைத்துப்பாக்கியை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கியில் குண்டுகள் உள்ளதா? இது வேறு ஏதேனும் குண்டுகளுடன் ஒத்துப்போகிறதா? இந்த கைத்துப்பாக்கி எந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகே இந்த கைத்துப்பாக்கி யாருடையது? எவ்வாறு தென்பெண்ணையாற்றுக்கு வந்தது என்பது குறித்து தெரியவரும் என கடலூர் புதுநகர் போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களின் மீன்பிடி வலையில் கைத்துப்பாக்கி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News