உள்ளூர் செய்திகள்

அதிகளவில் மாணவர்களை ஏற்றி சென்ற 115 வாகனங்களுக்கு ரூ.3.20 லட்சம் அபராதம்

Published On 2023-07-15 09:14 GMT   |   Update On 2023-07-15 09:14 GMT
  • 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சோதனை நடத்தினர்.
  • மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை,

கோவை, திருப்பூரில் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் வாடகை வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சில தினங்களுக்கு முன்பு பல இடங்களில் சோதனை நடத்தினர்.மொத்தம் 462 வாகனங்களை சோதனையிட்டதில் 13 பள்ளி வாகனங்கள், 33 ஆட்டோக்கள், 17 மேக்ஸி கேப், 23 டாக்சிகள் என மொத்தம் 115 வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஆட்டோவில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எனில் 5 பேர் வரை அனுமதிக்கப்படுவர். 12 வயதுக்கு அதிகமாக குழந்தைகள் எனில் 3 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல மேக்ஸி கேப் வாகனத்தில் 12 வயதுக்கு கீழ் இருந்தால் 12 பேரும், 12 வயதுக்கு மேல் இருந்தால் 18 பேர் வரையும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.பள்ளி வாகனங்களை பொருத்த வரை இருக்கைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையானது மாறும்.

இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்களை ஏற்றி சென்றதற்காக 115 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.3.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News