உள்ளூர் செய்திகள்

கோவையில் ஓடும் பஸ்சில் மாணவியிடம் ரூ.84 ஆயிரம் பறித்த 2 பெண்கள் கைது

Published On 2023-01-29 09:23 GMT   |   Update On 2023-01-29 09:23 GMT
  • 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
  • தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் கலைசெல்வி ( வயது 24). கோவை அரசு கலை கல்லூரியில் பி.எச்.டி படித்து வருகிறார். இவர் சிங்காநல்லூரில் இருந்து அரசு பஸ்சில் தனது தாயாருடன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மகளிர் பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கலைசெல்வி தனது பேக்கில் இருந்த மணிபர்சை எடுக்க முயன்றார். ஆனால் பர்சை காணவில்லை. பஸ்சில் வரும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ திருடி சென்று விட்டனர். அதில், 2 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ. 84,450 பணம் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் மீண்டும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர்களை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த 2 பெண்களும் பஸ்சில் கலைசெல்வியின் மணிபர்சை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை விதியை சேர்ந்த லட்சுமி(40), சித்ரா(30) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ. 84,450 பறிமுதல் செய்தனர். பின்னர் லட்சுமி மற்றும் சித்ராவை போலீசார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை தொண்டா முத்தூர் சேரன் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60).

இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சரஸ்வதி வேலைக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார்.

பின்னர் அவர் ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 2¼ பவுன் தங்க நகையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

யாரோ பஸ் வந்த போது திருடி சென்று விட்டனர். பின்னர் இதுகுறித்து சரஸ்வதி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

Similar News