உள்ளூர் செய்திகள்

தும்பிக்கை இல்லாமல் உலா வரும் குட்டி யானை

Published On 2023-01-13 15:21 IST   |   Update On 2023-01-13 15:21:00 IST
  • வனத்துறையினர் கண்காணித்து வருகிறோம் என்றனர்.
  • யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

வால்பாறை,

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழி முற்றிலும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.

யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

அதில் ஒரு குட்டி யானை தும்பிக்கை இல்லாமல் தாய் அரவணைப்பில் செல்வதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பாா்த்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்சூா் மாவட்ட வன அதிகாரி தலைமையில் வனத் துறையினா் அதிரப்பள்ளி வனப்பகுதிக்கு வந்து தும்பிக்கை இல்லாமல் செல்லும் பிறந்து சில மாதங்களேயான குட்டி யானையை கண்டனர்.

அந்த பகுதியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அங்கு செல்கின்றனர். அவர்கள் தும்பிக்கை இல்லாத குட்டி யானையை வீடியோ எடுத்தனர். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறும்போது, குட்டி யானைக்கு பிறவியிலேயே தும்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது பிற வனவிலங்குகள் தாக்கியதில் தும்பிக்கை இழந்திருக்கலாம்.

ஆனால், குட்டி யானை ஆரோக்கியத்துடன், தாய் யானையுடன் உலா வரு கிறது.

அந்த யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News