உள்ளூர் செய்திகள்

லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் 1968 அடி நீளத்தில் ஆகாய நடைபாலம்- இன்னும் சில நாட்களில் திறக்க ஏற்பாடு

Published On 2023-05-12 13:08 IST   |   Update On 2023-05-12 13:08:00 IST
  • ஆகாயநடை பாலம் 1968 அடி நீளத்தில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.
  • பாலம் திறக்கப்பட்ட உடன் தி.நகரில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

சென்னை:

தி.நகரில், பொதுமக்கள் வசதிக்காக பஸ்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடை பாலம் இன்னும் ஒருசில நாட்களில் திறக்கப்பட உள்ளது.

சென்னையின் முக்கிய வர்த்தக ஸ்தலமாக தி.நகர் திகழ்ந்து வருகிறது.இங்கு துணிகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு தி.நகர் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

ரெங்கநாதன்தெரு, மேட்லி சாலை, உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என அனைத்திலும் மக்கள் கூட்டம் தினமும் அலை மோதுகிறது. மேலும் புறநகர், எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் தி.நகருக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் பயணிகள், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தி.நகர் ரெயில்நிலையம்-பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாலம் அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்த ஆகாயநடை பாலம் 1968 அடி நீளத்தில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.

30 அடி உயரத்தில்,14 அடி அகலத்தில் இந்த ஆகாயநடை பாலம் தற்போது பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் இந்த பாலத்தில் எளிதாக ஏறி செல்வதற்காக லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.மேலும் பயணிகளை கவரும் வகையில் இந்த பாலத்தில் வண்ண ஓவியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் வசதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.

தி.நகர் ரெயில்நிலையம் -பஸ் நிலையம் இடையிலான ஆகாய நடைபாலம் அமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த ஆகாய நடைபாலத்தை திறக்க ஏற்பாடு நடந்து வருகின்றது.

இந்த ஆகாய நடை பாலம் திறக்கப்பட்ட உடன் தி.நகரில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பயணிகள், பொது மக்கள் எளிதாக தி.நகருக்கு வந்து செல்ல முடியும்.

Tags:    

Similar News