கோப்பு படம்.
ரெயில் மூலம் திண்டுக்கல் வந்த 546 டன் உரம்
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த 546.25 டன் உரங்கள் ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன.
- அதிகபட்ச விலைக்கு கூடுதலாக உரங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவ வேளாண்மைக்கு தேவையான ரசாயன உரங்கள் 190 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 361 தனியார் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டன. அந்த வகையில் யூரியா 3,790 டன், டி.ஏ.பி. 2,231 டன், பொட்டாஷ் 330 டன், காம்ப்ளக்ஸ் 6,277 டன், சூப்பர் பாஸ்பேட் 998 டன் இருப்பில் உள்ளது.
இந்நிலையில் உர நிறுவனம் மூலம் 16:16:16 காம்ப்ளக்ஸ் உரம் 255 டன், பொட்டாஷ் 289.25 டன், 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரம் 2 டன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த 546.25 டன் உரங்கள் ரெயில் மூலம் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு லாரிகள் மூலம் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. உர மூடைகள் வினியோகிக்கும் பணிகளை வேளாண்மை வட்டார உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக வேளாண் இணை இயக்குனர் அனுசுயா கூறியதாவது,
விவசாயிகள் ஆதார் எண்ணை கொடுத்து உரம் வாங்க வேண்டும். இதேபோல் விவசாயிகளுக்கு எளிதாக தெரியும் வகையில் உரங்களுக்கான விலை பட்டியல் பலகை வைக்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு கூடுதலாக உரங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.