உள்ளூர் செய்திகள்

5447 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்

Published On 2023-02-15 09:56 GMT   |   Update On 2023-02-15 09:56 GMT
  • (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
  • சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

சேலம்:

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய முடியும்.

மேலும், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சேலம் மாநகராட்சியில் காலை உணவாக உப்புமா வகைகள், கிச்சடி வகைகள் மற்றும் பொங்கல் வகைகள் உள்ளிட்டவை சுழற்சி முறையில் நாள்தோறும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக சேலம் மாநகராட்சியில் மணக்காடு சமுதாயக் கூடம், இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள டாக்டர்ஸ் காலணி, அம்மாப்பேட்டை வித்யா நகர், களரம்பட்டி சமுதாயக்கூடம், மணியனுர் காத்தாயம்மாள் நகர் சமுதாயக்கூடம் ஆகிய 5 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் ஏதுவாக 54 பள்ளிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தினசரி காலை உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட துணை கலெக்டர் நிலையில் ஒருவர் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News