உள்ளூர் செய்திகள்

பாளை கண்டக்டர் வீட்டில் 50 பவுன் கொள்ளை:நகைகளுடன் தப்பியவரை பிடிக்க போலீஸ் தீவிரம்

Published On 2023-01-27 14:37 IST   |   Update On 2023-01-27 14:37:00 IST
  • கொள்ளை கும்பல் புதுக்கோட்டை பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.
  • கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பெரும் பகுதியுடன் சம்சுதீன் நாகர்கோவில் தப்பியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நெல்லை:

பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள ஜான்சி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

50 பவுன் கொள்ளை

இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமசாமி குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களை கட்டிப்போட்டனர்.

பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க நகைகள், செல்போன்கள், பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.

விபத்தில் சிக்கினர்

தகவல் அறிந்ததும் நெல்லை, தூத்துக்குடி போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். இதற் கிடையே மோட்டார் சைக்கிளில் தப்பிய கும்பல் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு அப்பகுதியினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள சோரீஸ்புரம் மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து, ராஜீவ் நகரை சேர்ந்த கண்ணன் (20), பாரதி நகரை சேர்ந்த கிஷோர் டேனியல் (20) என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 3 பேரும் தங்களது நண்பர்களான தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த சிலுவை மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த சம்சுதீன் ஆகியோருடன் சேர்ந்து பாளையில் கண்டக்டர் ராமசாமி வீட்டில் கொள்ளை யடித்தது தெரிய வந்தது.

கைது

இதில் முத்து படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்ணன், கிஷோர் டேனியல் ஆகியோரை கைது செய்த போலீசார் சிலுவையையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர். 3 பேரும் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் தீவிரம்

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பெரும் பகுதியுடன் சம்சுதீன் நாகர்கோவில் தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகர்கோவில் விரைந்துள்ளனர்.

சம்சுதீனை பிடித்தால் தான் நகை எங்கு உள்ளது, வேறு யாருக்கேனும் இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்பது தெரிய வரும். எனவே அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News