உள்ளூர் செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தில் கோவையில் 4,045 அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு களப்பயணம்

Published On 2023-11-25 09:43 GMT   |   Update On 2023-11-25 09:43 GMT
  • கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து ஆய்வு
  • படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

கோவை,

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது பிளஸ்-2 படிக்கும் மாண வர்கள் அடுத்த ஆண்டு கல்லூரிக்கு சேரும் ஆர்வத்தை தூண்டும் வகை யில் களப்பயணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு தலா 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் 113 மேல்நி லைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 4 ஆயிரத்து 45 மாணவர்கள் கல்லூரி களப்பயணத்திற்கு தேர்வாகியுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுகளின் அடிப்படையில் அந்தந்த பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இதற்காக, பாரதியார் பல்கலைக்கழகம் வேளாண் பல்கலைக்கழகம், கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை அரசு கலைக்கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 24 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த களப்பயணத்தின் போது மாணவர்கள் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், நூலகம், ஆய்வகங்கள், உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதி அறைகள், உணவுகூடம், வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து பார்வையிட உள்ளனர்.

மேலும், கல்லூரியில் உள்ள இளங்கலை படிப்புகள், உதவித் தொகை திட்டங்கள், போட்டி தேர்வுகள், வேலைவாய்ப்புகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யபடவுள்ளது.

மேலும், களப்பயணத்தின் போது மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும். இந்த கல்லூரி களப்பயணத்திற்கு மாணவர்களை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News