உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் வெறிநாய் கடித்து 37 பேர் படுகாயம்

Published On 2022-10-29 04:50 GMT   |   Update On 2022-10-29 04:50 GMT
  • ஆண்டிபட்டி பகுதியில் இறைச்சி கடைகள் முன் கூட்டமாக திரியும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
  • மாவட்டத்தில் 7,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. 53 மருந்தகங்களில் 2650 வெறிேநாய் தடுப்பூசிகள் உள்ளன.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி பகுதியில் இறைச்சி கடைகள் முன் கூட்டமாக திரியும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை விரட்டி கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர். கொண்டமநாயக்கன்பட்டி காலனி பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்ததில் வடிவேலு (வயது 47), காமராஜ் நகர் லக்‌ஷனா (12), விஜயகுமார் (14), வரதராஜபுரம் திருமுருகன் (43), சிவா (27), லெனின் விஜய் (2), விஜயபூபதி (18), ஈஸ்வரன் (17), தேவி (34), செல்வம் (45), செல்வக்குமார் (27) உள்பட 27 பேர் படுகாயமடைந்தனர்.

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நல்லகருப்பன்பட்டியில் முனிசாமி (45), சுப்பிரமணி (69), சுப்புராஜ் (70), மல்லிகா (25) உள்பட 10 பேரை வெறிநாய் விரட்டி கடித்தது. இதில் காயமடைந்த அவர்களுக்கு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மாவட்டத்தில் 7,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. 53 மருந்தகங்களில் 2650 வெறிேநாய் தடுப்பூசிகள் உள்ளன. ஆண்டிபட்டி மற்றும் சில்வார்பட்டி பகுதியில் நாய்கள் கடித்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News