சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள்.
மடவளாகம் கபாலீஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா - 30ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
- காதி மல்லி மாலையிட்டு புளி சாதத்துடன் மூன்றாம் கால பூஜை நடந்தது.
- வீரசோழபுரம், பாப்பினி கிராம பொதுமக்கள் செய்தி ருந்தனர்.
காங்கேயம் :
காங்கேயம் அருகேயுள்ள பாப்பினி கிராமம்- மடவளாகத்தில் புராதன புகழ்பெற்ற ப்ருகன் நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரகுபதி நாராயணப்பெருமாள் ஆகிய கோவில்களில் வருடாந்திர சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசை ஆகிய முப்பெரும் விழா கடந்த 18ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி 20ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற்றது.
விழாவில் கபாலீஸ்வரருக்கு பஞ்சகவ்யம் படைத்து சந்தனகாப்பு சாத்தி நீலப்பட்டு உடுத்தி தாமரை மலர் சூடி, வெண்பொங்கல் படைத்து பழங்களுடன் முதல் கால பூஜை நடைபெற்றது. பஞ்சாமிர்தத்துடன் அகில் காப்பு இட்டு, மஞ்சள் பட்டு அணிவித்து விவ்வம் மாலை சாத்தி, வடை பாயாசம் படையலிட்டு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தேன் அபிஷேகம் செய்து சிவப்பு பட்டு உடுத்தி, காதி மல்லி மாலையிட்டு புளி சாதத்துடன் மூன்றாம் கால பூஜை நடந்தது.
கரும்பு சாறு, ஜவ்வாது பொட்டு வைத்து வெண்பட்டு உடுத்தி நந்தியாவட்டம் மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வண்ணமலர் அலங்காரத்துடன் நான்காம் கால பூஜை நடைபெற்றது. மங்களவாத்தியம் முழங்க சிவாச்சாரியர்கள் உலக நலன் வேண்டி கூட்டு வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள் நமச்சிவாய நம என்று கோஷமிட்டனர். இரவு முழுவதும் அர்ச்சனை அபிஷேகம், நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற்றன. கோவில் குலத்தவர்களான தோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்கள் உட்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக்குழு தலைவர் எஸ். தங்கமுத்து, செயலாளர் எம். ராமசாமி, பொருளாளர் அர்ச்சுணன், பாப்பினி அம்மன் கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், வாலசமுத்திரம் புதூர் பாலசுப்பிரமணியம் மற்றும் வீரசோழபுரம், பாப்பினி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.