தம்பதியை வழிமறித்து கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது- 25 வீச்சரிவாள், கையுறை பறிமுதல்
- சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
- கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவ ரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரகாஷ் குடும்பத்துடன் உறவினரின் மகன் பிறந்த நாள் விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
சாலவாக்கம் - திருமுக்கூடல் சாலையில் பொற் பந்தல் கிராமம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கத்தி முனையில் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி தீபாவை மிரட்டி அவர் அணிந்திருந்த நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சாலவாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சுரேஷ், அருண் குமார் மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த பாரதி ராஜா என்பதும், பொற் பந்தல் அருகே தம்பதியை மிரட்டி நகை-பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்த போது 25 வீச்சரிவாள்கள், கையுறை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் வேறு எந்தெந்த இடங்களில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.