போலீஸ் ஏட்டுவிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
- போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.
சேலம்:
சேலம் சின்ன திருப்பதி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.
இதுகுறித்து ஏட்டு இளங்கோவன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் ஏட்டுவிடமே கைவரிசை காட்டப்பட்ட இந்த வழிபறி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான தனிப்படை போலீசார், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். மேலும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்? என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை சேர்ந்த ேகாவிந்தராஜ் மகன் தீனா (28), சேலம் சிவதாபுரம் பனங்காடு ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ் (26), அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அஜிஸ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து, ஏட்டுவிடம் வழிபறி செய்த செல்போனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழிபறி கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.