சேலத்தில் இளம்பெண் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
- சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பாரதி நகர் பகுதி இளம்பெண் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தனர்.
- சரத்பாபுவின் மனைவி கருவுற்று இருந்ததாகவும், இவருக்கு தெரியாமலேயே இவரது மனைவி கருவை கலைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சரத்பாபு (வயது 21). திருமணமான இவர் இன்று அதிகாலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சரத்பாபுவின் மனைவி கருவுற்று இருந்ததாகவும், இவருக்கு தெரியாமலேயே இவரது மனைவி கருவை கலைத்ததால் மனம் உடைந்த சரத்பாபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதேபோல், சேலம் அம்மாபேட்டை இரட்டைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மகேந்திரன் (23). இவர் நேற்று இரவு மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், விஷத்தை குடித்து மயங்கினார். வீட்டில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொண்டலாம்பட்டி காதீயம் காடு பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி சுகவானேஸ்வரி (29). நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுகவனேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.