உள்ளூர் செய்திகள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆண்டு திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர் வழியாக பாதயாத்திரையாக செல்கின்றனர். அதனை படத்தில் காணலாம்.

28-ந் தேதி கொடி ஏற்றம்: கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

Published On 2022-08-24 08:04 GMT   |   Update On 2022-08-24 08:04 GMT
  • 28-ந் தேதி கொடி ஏற்றத்திற்காக கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
  • மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

கடலூர்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும். வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க பெருவிழா கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வருகை புரிந்து மாதாவை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயபக்தியுடன் பாதயாத்திரை சென்று வருவதும், பலர் அன்னை மரியாவின் புகைப்படங்கள் அடங்கிய சிறிய தேரை இழுத்து செல்வதையும் பலர் வாகனங்களில் செல்வதையும் காண முடிந்தது. மேலும் கடலூர் ஜி.ஆர்.கே. குழுமம் சார்பில் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர் துரைராஜ் அறிவுறுத்தலின் பேரில் பாதயாத்திரைக்கு செல்லக்கூடிய மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தற்போது நாளுக்கு நாள் பாதயாத்திரை செல்லக்கூடிய மக்கள் அதிகரித்து வருவதால் போலீசார் பாதுகாப்பாக செல்வதற்கு கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News