அரூர் மலைக்கிராமங்களில் மின்தடையை போக்க பழுதடைந்திருந்த 285 மின் கம்பங்கள் மாற்றம்
- மலைக் கிராமங்கள் மற்றும் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட மின் பாதைகளில் 966 இடங்களில் மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளது.
- மின்கம்பம் மற்றும் மின்மாற்றி பகுதியில் இருந்த குறைந்தழுத்த மின் பாதைகளில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மலைப்பகுதி ஊராட்சிகளான சிட்லிங், சித்தேரி பகுதிகளில் மின் இணைப்பு வழங்குவதற்காக மின்வாரியம் சார்பில் வனப்பகுதி வழியாக மின்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் மின் பாதையில், மரங்கள், மரக்கிளைகளால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மலை கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மின்தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அரூர் கோட்ட மின்வாரியம் சார்பில் வள்ளி மதுரை முதல் சித்தேரி வரையிலான மின் பாதை மற்றும் சித்தேரியில் இருந்து கலசப்பாடி செல்லும் மின் பாதை, சிட்லிங் ஊராட்சியில் சூரியக்கடை, ஏ.கே.தண்டா, வேலனூர், ஊமத்தி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மின்பாதைகளை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
சித்தேரி மலைக் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லும் சுமார் 25 கிலோமீட்டர் நீளமுள்ள மின் பாதை, சிட்லிங் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்லும் 12 கிலோமீட்டர் மின் பாதைகளில் இடையூறாக இருந்த 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்கள், புதர்கள் அகற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளபட்டது.
தேவையான இடங்களில் கூடுதல் மின்கம்பங்கள் நடும் பணியும் நடந்தது. வனத்துறை ஒப்புதலுடன் 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு பணி மேற்கொண்டனர். கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட பணி முடிவடைந்துள்ளது.
இது குறித்து அரூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி கூறுகையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி மலைக் கிராமங்கள் மற்றும் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட மின் பாதைகளில் 966 இடங்களில் மின்பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளது.
மின்கம்பம் மற்றும் மின்மாற்றி பகுதியில் இருந்த குறைந்தழுத்த மின்பாதைகளில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளது. குறைந்தழுத்த மின் பாதைகளில் 244, உயர் அழுத்த மின்பாதையில் 41 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. தாழ்வான மின் பாதைகள் சரி செய்யப்பட்டு அதில் 66 இடங்களில் புதியதாக மின் கம்பங்கள் இடைசெறுகல் செய்யப் பட்டுள்ளது. மேலும், மின்மாற்றி மற்றும் மின் பாதை பராமரிப்பு, பழைய கம்பிகள் மாற்றம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என கூறினார்.