உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 தேர்வில் நீலகிரியில் 26 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-28 15:50 IST   |   Update On 2022-06-28 15:50:00 IST
  • மாணவிகள் அதிகம் பேர் வெற்றி
  • செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது.

ஊட்டி :

தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. கடந்த வாரம் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளில் அளித்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. தேர்வு முடிவு வெளியான உடனே மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

ஊட்டியில் உள்ள பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிகள் ஒட்டப்பட்டன. இதனை மாணவர்கள் பார்த்து மதிப்பெண்களை தெரிந்துகொண்டனர். 91 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 3,415 மாணவர்கள், 3,861 மாணவிகள் என மொத்தம் 7,276 பேர் எழுதினர். இதில் 2,951 மாணவர்கள், 3,674 மாணவிகள் என மொத்தம் 6,625 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.05 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 86.41 சதவீதமும், மாணவிகள் 95.16 சதவீதமும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் நீலகிரியில் 2 அரசு பள்ளிகள், ஒரு பழங்குடியினர் பள்ளி, 20 தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 26 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. கலைப்பிரிவு பாடங்களில் அதிகபட்சமாக 95 சதவீதம் பேரும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் குறைந்தபட்சமாக 73 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.  

Tags:    

Similar News