குப்பைகளை அகற்ற 21 ஆட்டோ வாகனங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
- பச்சை மற்றும் நீல நிற கூடைகள் வழங்கினார்.
- தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி காந்தி மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில், கோத்தகிரி, ஜெகதளா, நடுவட்டம் பேரூராட்சிகளுக்கு குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் 21 ஆட்டோ வாகனங்களை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், இயற்கையை பேணி காத்திடவும், மாசற்ற நிலையை ஏற்படுத்திட கோத்தகிரி பேரூராட்சிக்கு 9 பேட்டரி வாகனங்களும், ஜெகதளா பேரூராட்சிக்கு 6 பேட்டரி வாகனங்களும், நடுவட்டம் பேரூராட்சிக்கு 6 பேட்டரி வாகனங்களும் என மொத்தம் குப்பைகளை அகற்றும் 21 பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ வாகனம் ரூ.31.50 லட்சம் மதிப்பில் பேரூராட்சிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை சரியான முறையில் அகற்றுவதற்காகவும், தூய்மையாக்கவும் இந்த பேட்டரி ஆட்டோ வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபடாது. மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆட்டோ அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரமாக வழங்கப்படும். எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனி தனியாக பிரித்து வழங்கி பேரூராட்சிப்பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அமைச்சர் அவர்கள் காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு அரங்கத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கியும் கவுரவித்தார்.
கோத்தகிரி, ஜெகதளா, நடுவட்டம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிய 21 வார்டில் உள்ள பொதுமக்களுக்கு பரிசுக ளும், பேரூராட்சிக்குட்பட்ட 22 தூய்மை பணியா ளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும், 5 தயர்களுக்கு உரங்களையும், வணிக வியாபாரிகளுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க, பச்சை மற்றும் நீல நிற கூடைகள் வழங்கினார்.
இதில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணகுமார், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) இப்ராஹிம்ஷா, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, பேரூராட்சி தலைவர்கள் ஜெயக்குமாரி (கோத்தகிரி), யங்களும் (ஜெகதளா), கலியமூர்த்தி (நடுவட்டம்), பேரூராட்சி செயல் அலுவலர்கள் மணிகண்டன் (கோத்தகிரி), சதாசிவம் (ஜெகதளா), பிரதீப்குமார் (நடுவட்டம்) கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், ஜெய்சங்கர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.