உள்ளூர் செய்திகள்
பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்காக திறக்கப்பட்ட நீர் வெளியேறும் காட்சி.

பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு

Published On 2022-06-03 10:49 GMT   |   Update On 2022-06-03 10:49 GMT
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார்சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
சிங்கை:

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து ஆண்டுேதாறும் கார், பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கார் சாகுபடியையொட்டி வழக்கம்போல் கடந்த 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக இருப்பதால், இன்று முதல் விவசாயிகளின் நலன் கருதி அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து கார்சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பாபநாசம் அணையில் 135 அடி தண்ணீர் இருந்தது.

இதனால் ஜூன்1-ம் தேதி திறந்து விடப்பட்டது. தற்போது 71 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. எனினும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும் என்பதால் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும். நெல், நாற்று உற்பத்தி செய்ய இன்று முதல் 20 நாட்களுக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்பின்னர் நீர் இருப்பை பொறுத்து தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், இசக்கி சுப்பையா, மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரினால் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 2,260 ஏக்கரும், தெற்கு கோடைமேலழகியான் கால்வாயில் 870 ஏக்கரும், நதியுண்ணி கால்வாயில் 2460 ஏக்கரும், கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கரும், கோடகன் கால்வாய் மூலம் 6000 ஏக்கரும், பாளையங்கால்வாய் மூலம் 6200 ஏக்கரும், நெல்லை கால்வாய் மூலம் 2525 ஏக்கரும் பாசன வசதி பெறும்.

 மொத்தம் 32,815 ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும்,. மறைமுகமாகவும் பயன் பெறும் என்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் வருகிற அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை நீர் இருப்பை பொறுத்து 132 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.
Tags:    

Similar News