உள்ளூர் செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2022-06-03 15:19 IST   |   Update On 2022-06-03 15:19:00 IST
கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், ஜூன் 13-ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.

எனவே, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News