உள்ளூர் செய்திகள்
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்த முதல்வர்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Published On 2022-05-30 10:54 GMT   |   Update On 2022-05-30 10:54 GMT
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி:

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, இன்று திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக வருகைப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்து, பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய பேருந்து நிலைய அமைப்புப் பணியின் நிலை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி உடனடியாக சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.   

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் பி.எம்.என். முஜிபுர் ரகுமான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.  
Tags:    

Similar News