உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் கரிசல் முத்தாரம்மன் கோவிலில் விளக்கு பூஜை
சாத்தான்குளம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோவிலில் வருடாந்திர கொடை விழாவையொட்டி விளக்கு பூஜை நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் கரிசல் முத்தாரம்மன் கோவிலில் வருடாந்திர கொடை விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து யாகசாலை பூஜை, விமான அபிஷேகம், முத்தாரம்மன், மாரியம்மன், பெரியம்மன், உஜ்ஜினியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேம் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானம் நடந்தது.
இரவு 7 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 2-வது நாள் வில்லிசையும், சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது.
மஞ்சள் பெட்டி ஊர்வலமும், சிறப்பு அலங்கார பூஜையும்,கும்பம் தெரு வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 3-வது நாள் வில்லிசையும், சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது.
இரவு 7 மணிக்கு நாட்டில் நல்ல கன மழை வேண்டி 504 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை அம்பிகை தாசன் ஆர்.ஜி.பாலன் நடத்தினார்.
இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கும்பம் தெரு வீதி உலா நடந்தது. 4-வது நாள் கொடை விழா நிறைவு பூஜையும், வரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கொடை விழா குழுவினர் மற்றும் கரிசல் ஊர் மக்கள் செய்திருந்தனர்.