உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
கடந்த 30 ஆண்டுகளாக கோத்தகிரி நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்தது.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்துக்கு புதிய நீதிபதியாக பொறுப்பேற்ற முருகன் கோத்தகிரிக்கு வந்தார். அவர் வருவாய்த் துறையால் நீதிமன்றம் கட்ட தேர்வு செய்யப்பட்ட சக்திமலைப் பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக கோத்தகிரி நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது அதன் இடவசதி குறைவாக உள்ளது.இதனால் வக்கீல் சங்கத்தினர் புதிய கட்டிடம் வேண்டும் என கேட்டதன் பேரில், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான நிலம் வருவாய்த் துறையால் சக்தி மலை பகுதியில் ஒதுக்கப்பட்டது.
அதனை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, நிலத்தின் பரப்பளவு மற்றும் கட்டிடம் கட்டுவதற்கு அந்த இடம் ஏதுவாக இருக்குமா? என கோத்தகிரி தாசில்தார் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது ஒரு ஏக்கர் நிலம் எதிர்காலத்தில் கோர்ட்டு விரிவாக்கத்திற்கு ஏற்றதாக இருக்காது. எனவே, மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி கூடுதலாக 4 ஏக்கர் நிலத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது கோத்தகிரி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வனிதா, தாசில்தார் காயத்ரி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.