உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2022-05-25 03:57 GMT   |   Update On 2022-05-25 03:57 GMT
இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

அ. தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியதற்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் இயக்கமான அ.தி.மு.க. பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எந்த மதத்தை இழிவுபடுத்தி பேசினாலும் அதை அ.தி.மு.க. எதிர்க்கும்.

முதல்-அமைச்சர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை முதல்-அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் வழியில் செயல்படுகின்ற ஆட்சி என்று அடிக்கடி சொல்லும் முதல்-அமைச்சர் , தி.மு.க. கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல என்று அடிக்கடி சொல்லும் முதல்-அமைச்சர், தி.மு.க. வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் முதல்-அமைச்சர், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அதிர்ச்சியோடும், வேதனையோடும் மக்கள் பார்க்கிறார்கள். பிற மதங்களையோ அல்லது பிற மதக் கடவுள்களையோ யார் பழித்துப் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.

இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சருக்கு உண்டு.

எனவே, இந்துக் கடவுளை இழிவுபடுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய, தரக்குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்துத் தெய்வத்தை விமர்சித்துள்ள மேற்படி யு2 புருடஸ் என்ற யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தரவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News