உள்ளூர் செய்திகள்
.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு-விண்ணப்பிக்கும் செயல்பாடு நாளையுடன் முடிவடைகிறது

Published On 2022-05-24 10:30 GMT   |   Update On 2022-05-24 10:30 GMT
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கும் செயல்பாடு நாளையுடன் முடிவடைகிறது.
சேலம்:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேலம் மாவட்டத்தில்  உள்ள  அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்,  நலிவடைந்த பிரிவினரின்  குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை வகுப்பில் (எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. 
 
அதன்படி வருகிற கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேருவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு கல்வித்துறை வெளியிட்டது.  விண்ணப்பிப்பதற்கான செயல்முறை  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின்  கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) இணையதளத்தில்   கடந்த  ஏப்ரல் மாதம் 20-ந்தேதி  தொடங்கியது.  

விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  18-ம் தேதி என அறிவித்து இருந்தது.  அதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு இந்த இணையதளம் வழியாக    விண்ணப்பித்து வந்தனர்.

இதனிடையே  இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க உரிய ஆவணங்களான  வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,  ஆதார்   உள்ளிட்டவைகள் அரசிடம இருந்து பெறுவதற்கு பல நாட்கள் ஆனதால்   ஏழை, எளிய பெற்றோர் பலர் விண்ணப்பிக்கவில்லை. இது அரசின் கவனத்திற்கு வந்தது.
 
இதையடுத்து,  தமிழக அரசு, ஏழை, எளிய குழந்தைகளின் நலன் கருதி  விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து உத்தரவிட்டது. அதாவது 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை என 7 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வழங்கியது.  இந்த நிலையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் முறை   நாளை (25-ந்தேதி) யுடன் முடிவடைகிறது.  

நாளை கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெற்றோர் பலர் ஆர்வமுடன்  விண்ணப்பித்து  வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் வரும் 353 பள்ளிகளிலும் கடந்த ஆண்டை விட விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளன. 
Tags:    

Similar News