உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வேலிகள் மூலம் வாழைகளை பாதுகாக்கலாம் - தோட்டக்கலை துறை அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-05-23 05:41 GMT   |   Update On 2022-05-23 05:41 GMT
சவுக்கு மரங்களை நடுவதன் மூலம் வாழைகளை பாதுகாக்க முடியும்.

திருப்பூர்:

பல்லடம் வட்டார பகுதியில் தக்காளி, வெங்காயம், புடலை, அவரை உள்ளிட்ட காய்கறி பயிர்கள், தானியங்கள் மற்றும் தென்னை, வாழை ஆகியவை பயிரிடப்படுகின்றன. நோய் மற்றும் பூச்சி தாக்குதலால், காய்கறி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

அதேபோல் பலத்த காற்று, மழை ஆகியவை வாழைகளுக்கு எதிரியாக உள்ளன. சுழன்றடிக்கும் சூறை காற்றுக்கு வாழைகள் வேருடன் சாய்வது ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் நிலையில் வாழைகளை பாதுகாக்கும் வழிமுறை குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனாபேகம் கூறியதாவது:-

பல்லடம் வட்டார பகுதியில் நேந்திரன் வாழைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ஓராண்டுக்குள் இவற்றை பாதுகாப்பது என்பது சவாலான காரியமாகும். காற்று, மழை ஆகியவை வாழைகளை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வேலி அமைப்பதன் மூலம் வாழைகள் சேதம் அடைவதை தடுக்கலாம்.

காற்றைத் தடுத்து வாழைகளை பாதுகாப்பதில் சவுக்கு மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேலி ஓரங்களில் குறிப்பிட்ட இடைவெளியுடன் இரண்டு அடுக்காக சவுக்கு மரங்களை நடுவதன் மூலம் வாழைகளை பாதுகாக்க முடியும். சவுக்கு மரங்கள் விளைநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதுடன் இவற்றால் விவசாயிகளுக்கு அதிக லாபமும் உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News