உள்ளூர் செய்திகள்
கடற்கரை கோவில் அருகே கடல்நீர் புகுந்தது

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்- கடற்கரை கோவில் அருகே கடல்நீர் புகுந்தது

Published On 2022-05-16 08:09 GMT   |   Update On 2022-05-16 08:09 GMT
மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் அருகே மணற்பரப்பை அரித்து நிலப்பரப்பில் கடல்நீர் புகுந்து தேங்கி உள்ளது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடற்கரை கோவில் அருகே கடல் நீர் பல அடிதூரம் வெளியேறி மணற்பரப்பை சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து கோயிலை பார்த்து ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் அலை சீற்றம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:

வங்க கடலின் நீரோட்டம் ஜனவரி, ஜூன் மாதங்களில் தெற்கில் இருந்து வடக்கும், ஜூலை, டிசம்பர் காலங்களில் வடக்கில் இருந்து தெற்கும் நீரோட்டம் அமைவது வழக்கம். தற்போது நேராக வந்து கடல்நீர் பல அடிதூரத்துக்கு வெளியேறி உள்ளது.

நேற்று பவுர்ணமி என்பதால் கடல் சீற்றம் மட்டும் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மணற்பரப்பை அரித்து நிலப்பரப்பில் கடல்நீர் புகுந்து தேங்கி உள்ளது. வானிலை ஆய்வு மையம் இங்கு வைத்திருந்த கடல் பேரிடர் முன் எச்சரிக்கை ஒலிப்பான் செயல்படவில்லை. இதுபோன்ற புதிய வானிலை மாற்றங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுத்தால் எங்கள் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News