உள்ளூர் செய்திகள்
மீன் வலைகள் உலர்த்தும் சமுதாய கூடம் கடல் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் உள்ளது

கூவத்தூர் அருகே 3 மீனவ கிராமங்களில் கடல் அரிப்பால் பயங்கர பாதிப்பு- கரையோர கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம்

Published On 2022-05-11 07:12 GMT   |   Update On 2022-05-11 07:12 GMT
ஆலிக்குப்பம், கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய 3 மீனவ கிராமமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயல், கடல் சீற்றம் ஏற்படும் போது உயிர் பயத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:

கூவத்தூர் அருகே கடலோரத்தில் ஆலிக்குப்பம், கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கடற்கரை ஓரம் வீடுகட்டி குடியிருக்கும் மீனவர்களின் வீடுகள் ஏற்கனவே சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது.

தற்போது வலைகளை காயவைக்கும் கட்டிடம் மற்றும் பிடித்து வரும் மீன்களை ஏலம் விடும் கூடாரம் என அனைத்து கட்டிடங்களும் இடிந்து கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை விட சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அலைகள் கரைக்கு வந்துள்ளன.

தற்போது அசானி புயல் காரணமாக கடலில் கூடுதலா அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் அரிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமான கடலோரத்தில் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் ரோட்டில் நிறுத்தும் நிலை உருவாகி உள்ளது. மேலும் பஸ் போக்குவரத்தும் மீனவ கிராமங்களுக்கு வருவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆலிக்குப்பம், கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய 3 மீனவ கிராமமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயல், கடல் சீற்றம் ஏற்படும் போது உயிர் பயத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுமுபோது, இந்த 3 மீனவ கிராமங்களிலும் விரைவில் தூண்டில் வளைவு அமைக்க வில்லை என்றால், கரையோர கட்டிடங்கள் படிப்படியாக கடலில் மூழ்கும். எனவே விரைவில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டு மத்திய, மாநில அரசிடம் ஆய்வறிக்கை சமர்பித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பரை குப்பத்தில் மத்திய மீன்வ ளத்துறை சார்பில் கட்டப்பட இருக்கும் மீன்பிடி துறைமுகம் பணிகள் தொடங்கும் போது இந்த பகுதியில் தூண்டில் வளைவு கட்டும் பணியும் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News