உள்ளூர் செய்திகள்
திருட வந்த வாலிபர் வினோத்ராஜை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்.

வீட்டில் திருட முயன்ற வாலிபரை துரத்தி பிடித்து மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்

Published On 2022-05-10 14:53 IST   |   Update On 2022-05-10 14:53:00 IST
நாகை அருகே வீட்டில் திருட முயன்ற வாலிபரை துரத்தி பிடித்த பொதுமக்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து விடிய விடிய காவல் காத்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் தெற்குதெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரை டவுசர் அணிந்தபடி மர்மநபர் ஒருவர் புகுந்தார். 

இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவனை நோட்டம் விட்டபடியே பின் தொடர்ந்துள்ளனர். இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடிக்க தொடங்கினார். சுமார் 300 மீட்டர் தூரம் ஆங்காங்கே விழுந்து விழுந்து ஓடிய திருடனை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் அவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து விசாரித்தனர். இதில் அவர் சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்பதும் ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து வேளா ங்கண்ணி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவினால், வினோத்ராஜ் தப்ப விடாமல் விடிய விடிய மக்களே காவல் காத்தனர். இன்று அவரை போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Similar News