உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க 40 குடும்பத்தினர் வெளியேற்றம்

Published On 2022-05-10 12:32 IST   |   Update On 2022-05-10 12:32:00 IST
செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி வெண்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு பஸ்நிலையத்திற்கு 10 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டில் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லவும் பயணிகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

இதையடுத்து செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி வெண்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு பஸ்நிலையத்திற்கு 10 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதில் பஸ்நிலையம் 5 ஏக்கரிலும், பணிமனைக்கு 5 ஏக்கரும் ஒதுக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது.

பஸ்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமானது ஆகும். இந்த இடத்தில் உள்ள நேதாஜி நகரில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி சுமார் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

இதையடுத்து 40 குடும்பத்தினரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இதற்கு முன்பும் இதேபோல் இடத்தை காலிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து நாங்கள் தப்பித்தோம். இதையடுத்து நாங்கள் எங்களிடம் உள்ள பணத்தை வைத்து வீடு கட்டி உள்ளோம். இப்போது இடத்தை காலி செய்யுமாறு கூறுகிறார்கள். நாங்கள் எங்கே செல்வோம் என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, 1960ம் ஆண்டு மருத்துவகல்லூரிக்காக தொழில் அதிபர் ஒருவர் 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்து இருந்தார். அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அவர்களுக்கு பட்டா கிடையாது. புதிய பஸ்நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி உள்ளோம் என்றார்.

Similar News