உள்ளூர் செய்திகள்
மோசடி

வேதாரண்யத்தில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி நகைக்கடைக்காரரிடம் ரூ.96 லட்சம் மோசடி

Published On 2022-05-04 13:41 IST   |   Update On 2022-05-04 13:41:00 IST
தங்கம் விற்பதாக கூறியவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகை அருகே உள்ள வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார். அப்போது ஒரு பெண் உள்பட 7 பேர் அவரிடம் இருந்த ரூ.96 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சிறிதளவு தங்கத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

வேதாரண்யம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்கிய கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் முருகன். இவரிடம் நாகை மாவட்டத்தை சிலர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும் போன் மூலமாக மிக நம்பிக்கையாக பேசியுள்ளனர்.

நேற்று அட்சய திரிதியைெயாட்டி நகை வாங்கலாம் என முருகன் நேற்று மாலை கள்ளக்குறிச்சியில் இருந்து ரூ.96 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனியாக காரில் நாகை மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

பின்னர் தங்கம் விற்பதாக கூறியவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகை அருகே உள்ள வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார்.

அப்போது ஒரு பெண் உள்பட 7 பேர் அவரிடம் இருந்த ரூ.96 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சிறிதளவு தங்கத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் அவர்களிடம் ரூ.96 லட்சத்துக்கு உரிய நகைகளை கொடுங்கள், இல்லாவிட்டால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த 7 பேரும் முருகனை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர்.

இதையடுத்து முருகன் நடந்த சம்பவம் பற்றி வேதாரண்யம் போலீசில் உடனடியாக புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த பண்டரிநாதன், விக்னேஷ், முருகையன், தனுஷ்கோடி, வெள்ளதுரை, மணிமாறன் மற்றும் துர்க்காதேவி ஆகிய 7 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் 7 பேரும் முருகனிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததோடு அவரை தாக்கி நகைகளையும் பறித்தது தெரியவந்தது.

மேலும் இலங்கையில் இருந்து நகைகளை கடத்தி வந்து இவர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தனரா? இல்லை போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டனரா? எப்படி கள்ளக்குறிச்சியில் உள்ள நகைக்கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு ஏமாற்றினர். இதில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News