உள்ளூர் செய்திகள்
கரும்புகையுடன் லாரி தீப்பற்றி எரிவதை காணலாம்

கருமத்தம்பட்டி அருகே மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த பெயிண்ட் லாரி

Published On 2022-04-25 05:32 GMT   |   Update On 2022-04-25 05:32 GMT
கருமத்தம்பட்டி அருகே மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து பெயிண்ட் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி:

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. அதன் அருகே நேற்று மதியம் ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதை டிரைவர் பிரவீன்(வயது35) ஓட்டி வந்தார். அவருடன் மற்றொருவரும் இருந்தார்.

லாரி அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.

சாலையில் கவிழ்ந்த சில நிமிடங்களிலேயே லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கரும்புகையுடன் தீயும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. லாரி டிரைவர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் லாரியில் சிக்கி கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

இதனை அந்த பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். மேலும் கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் சூலூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து லாரியில் சிக்கியிருந்த டிரைவர் பிரவீன் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும் சாலையில் வழிந்தோடிய பெயிண்டிலும் தீ எரிந்தது. அதையும் தீயணைப்பு துறை வீரர்கள் அணைத்தனர். இருப்பினும் லாரி முழுவதுமாக எரிந்து விட்டது.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

Similar News