உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Published On 2022-04-23 16:17 IST   |   Update On 2022-04-23 16:17:00 IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டி அறிவுரைகள் மற்றும் வேலை வாய்ப்பிற்கான வழிகள் குறித்து தற்போது தொழில்முனைவோர்களாக உள்ளவர்கள், கல்வியாளர்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக வகுப்பு நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், மேல்நிலை கல்வி படிக்கும்போதே அடுத்து உயர்கல்விக்கு என்னென்ன படிக்கலாம், என்ன படிப்பு படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தெளிவை நீங்கள் பெறுவதற்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்க்கையில் தொழில்முனைவோராக, கல்வியாளராக வெற்றி பெற்றவர்கள் கடந்து வந்த பாதைகள், அவர்கள் சந்தித்த சோதனைகள், சாதித்த சாதனைகள் என அனைத்தையும் உங்களுடன் காணொலி வாயிலாக பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இந்த திட்டத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 45 அரசு பள்ளிகளில் பயிலும் 4,053 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர், என்றார்.

Similar News