உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் அரசு மாணவர்கள் விடுதிகளில் ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடு- கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மாணவர்கள் விடுதிகளில் ஒதுக்கப்படும் நிதியில் முறைகேடுகளை தடுக்க கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர், சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் உட்பட 12 வட்டாரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 49 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இதில் தாய் தந்தை இழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவனுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவனுக்கு 1100 ரூபாயும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது, இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 49 விடுதிகளுக்கு மாணவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு வழங்குவதற்காக ஒரு மாதத்திற்கு 32 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
ஒவ்வொரு விடுதிக்கும் 55 மாணவர்கள் தங்கி படிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம்பாடி, அண்டம் பள்ளம், வாளவெட்டி மற்றும் தச்சம்பட்டு உட்பட பல்வேறு விடுதிகளில் மாணவர்கள் பயிலாமலேயே தங்கி பயிலுவதாக விடுதி காப்பாளர்கள் போலியாக வருகைப் பதிவேடு தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாதா மாதம் பல ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை கையாடல் செய்வதாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் விடுதி காப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாற்றுகின்றனர்.
எனவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.