உள்ளூர் செய்திகள்
செங்கம் அருகே விபத்தில் வாலிபர் சாவு
செங்கம் அருகே விபத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள செ.நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது21). இவர் நேற்று மாலை செ.நாச்சிபட்டு கிராமத்திலிருந்து செங்கம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முருகர் கோவில் அருகே திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் லாரியில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த விபத்து குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் இறந்த பிரசாத்தின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரியும் அவரது உறவினர்கள் பிரசாத்தின் உடலை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து செங்கம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணகுமரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பிரசாதின் உடலை செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.