உள்ளூர் செய்திகள்
வேலூர் ஆற்காடு சாலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
வேலூர், ஆற்காடு சாலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை திகழ்கிறது.எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்கு ஆக்கிரமிப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் இருந்து காகிதப்பட்டறை கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் ஒரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டன.
இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர். அப்போது கடைகளின் முன் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மேற்கூரைகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் சில இடங்களில் தள்ளுவண்டி கடைகளும் தகரத்தால் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றியதால் ஆற்காடு சாலை பல இடங்களில் 100 அடிக்கு மேல் அகலமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.