உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

Published On 2022-04-21 16:06 IST   |   Update On 2022-04-21 16:06:00 IST
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பெரம்பலூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடந்தது.

இதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மாவட்ட அளவிலான போட்டிகளில் மட்டுமல்லாது, மாநில அளவில், தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக இருக்கும் என்றார்.

போட்டிகளுக்காக மாற்றுத்திறனாளிகளை 4 வகைகளாக பிரித்து,  அவர்களில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

தடகள போட்டிகளான 50, 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், சாப்ட் பால் எறிதல், சக்கர நாற்காலி போட்டி, நின்ற நிலையில் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.  

குழுப்போட்டிகளான இறகுபந்து, மேசை பந்து, வாலிபால், எறிபந்து, கபடி போட்டி போன்றவையும் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும், குழு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, பள்ளி முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், தடகள பயிற்சியாளர் கோகிலா, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News