உள்ளூர் செய்திகள்
வேலூரில் அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்ட காட்சி.

வேலூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் மோதல் -பரபரப்பு

Published On 2022-04-21 15:26 IST   |   Update On 2022-04-21 15:26:00 IST
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் வாணியம்பாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு அளித்தார்
வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர், மாநகர் மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், இணை செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிக்கான தேர்தல் மாநகர அ.தி.மு.க அலுவலகம் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.

மாநகரத்திற்கு காட்பாடி கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சின்னையா, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.

மாநகர மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கே.அப்பு மற்றும் பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ் குமார், சூளை ஆனந்தன் ஆகியோர் மனு அளித்தனர். மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு மற்றும் அ.தி.மு.க மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் டி.ஆர்.முரளி ஆகியோர் சார்பாக மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்க வந்தனர்.

அவர்களை வேலூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். ராமு, முரளி ஆகியோர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கூடாது. அவர்கள் புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் ராமு, முரளி ஆகியோர் சார்பில் மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அவர்களை மனு கொடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க நிர்வாகிகள் உங்கள் மாவட்டத்தில் சென்று மனு அளியுங்கள் என தொடர்ந்து ஆவேசமாக குரல் எழுப்பினர்.

அப்போது தேர்தல் பொறுப்பாளர்கள் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாநகர் மாவட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாமா என்பது குறித்து கட்சி மேலிடத்தில் கேட்டு பின்னர் வாங்கப்படும் என தெரிவித்தனர்.

இதனால் ராமு மற்றும் முரளி சார்பாக மனு அளிக்க வந்தவர்கள் மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

இந்த சம்பவத்தால் அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் உள்ளது.

புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கந்தனேரியில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் வேலழகன் மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் வாணியம்பாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு அளித்தார்

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் ராணிப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார். இதேபோல் செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் தூசி மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

மாவட்ட செயலர் பதவிக்கு ரூ.25 ஆயிரம் மற்ற பதவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்று வேட்புமனுக்களை பொறுப்பாளர்களிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் கட்சித் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு அந்த பதவிக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட உள்ளது.




Similar News