உள்ளூர் செய்திகள்
மாணவியிடம் அத்துமீறிய பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி போராடிய பழங்குடியின பெண்கள்

மாணவியிடம் அத்துமீறியதாக புகார்: பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பழங்குடியின பெண்கள் போராட்டம்

Published On 2022-04-20 11:56 IST   |   Update On 2022-04-20 11:56:00 IST
மாணவியிடம் அத்துமீறிய பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பழங்குடியின பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் எம்.பாலாடாவில் உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்பிரமணி(58) என்பவர் பணியாற்றினார்.

இந்த நிலையில் இவர், அந்த பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் பழங்குடியின மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தகாத முறையில் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இந்தசம்பவம் குறித்தும் மாணவி தனது பெற்றோருடன் சென்று ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் போலீசார் சுப்பிரமணி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஞானரவி மற்றும் போலீசார் பள்ளியில் சென்று விசாரித்தனர். இதில் தலைமை ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் புகார் அளித்து 18 நாட்களை கடந்தும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கோத்தர் பழங்குடியின பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படும் ஏகலைவா உண்டு, உறைவிட பள்ளி முத்தோரை, பாலாடா பகுதியில் உள்ளது. விடுதி வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பாதுகாப்புக்கு என காவலர் கிடையாது. சி.சி.டி.வி காமிராக்களும் இல்லை.

இந்த சூழலில் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த சுப்பிரமணி என்பவர் பழங்குடியின மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்தபோது வழக்குப்பதிவு செய்ய காலம் கடத்திய போலீசார் தற்போது அவரை கைது செய்யாமல் இருக்கின்றனர்.

மேலும் தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த நிலையில் பள்ளியில் உள்ள ஒரு பெண் ஆசிரியர் உள்பட சில ஆசிரியர்கள், பழங்குடியின மாணவ, மாணவிகளை இழிவாக பேசி வருகின்றனர். எனவே தலைமறைவாக உள்ள ஆசிரியரை கைது செய்வதுடன், மாணவிகளை இழிவாக பேசி வரும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2 நாட்களுக்குள் தலைமை ஆசிரியர் கைது செய்யப்படுவார். பள்ளியில் மாணவ, மாணவிகளை இழிவாக பேசிய ஆசிரியர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Similar News