உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னர்

கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்- அமித்ஷாவை சந்தித்து பேச முடிவு?

Published On 2022-04-20 03:01 GMT   |   Update On 2022-04-20 06:14 GMT
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை இரவு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இதற்காக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளது.

ஆனால் அந்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கோரி தி.மு.க. சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் சமீபத்தில் கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மயிலாடுதுறை அருகே உள்ள தர்மபுரம் ஆதீன விழாவில் பங்கேற்க சென்றார். மன்னம்பந்தல் அருகே சென்றபோது சாலையோரத்தில் திரண்டு இருந்தவர்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் விவகாரத்தில் கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் உரசல் ஏற்பட்டுள்ள நிலையில் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது அரசியல் ரீதியாக மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

கவர்னர் ஆர்.என்.ரவி மாதந்தோறும் டெல்லி சென்று வருகிறார். கடந்த 7-ந்தேதி டெல்லி சென்ற அவர் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லியில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்றும், நாளையும் 2 நாட்கள் இருக்கிறார். அப்போது அவர் யார் யாரை சந்திப்பார்? எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தனிப்பட்ட முறையில் அவர் டெல்லி சென்றிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அவர் வீடு கட்டி வருவதாகவும், அதை பார்க்க அவர் செல்வதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே கவர்னரின் மகள் டெல்லியில் இருக்கிறார். அவரை பார்க்க சென்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர் மத்திய மந்திரிகள் சிலரை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கவர்னருக்கு மயிலாடுதுறையில் கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவிடம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எனவே இந்த சம்பவம் குறித்தும் அமித்ஷாவிடம் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கவர்னரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (வியாழக்கிழமை) இரவு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

எனவே அடுத்த ஓரிரு நாட்களில் கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Tags:    

Similar News