உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

Published On 2022-04-19 06:24 GMT   |   Update On 2022-04-19 06:25 GMT
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர், தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தனியே பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர்:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிவிப்பின்படி ஏப்ரல் 10-ந் தேதி முதல் தனியார் மருத்துவமனையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது.

ஒரு தடுப்பூசியின் விலை 225 ரூபாய். ஊசி செலுத்துவதற்கான சேவை கட்டணம் 150 ரூபாயை மருத்துவமனைகள் வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 23 தனியார் மருத்துவமனைகளில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர், தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தனியே பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் முன்பதிவு அல்லது தனியார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில், 25 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் வந்துள்ளதால் தற்போதைய நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

வரும் நாட்களில் அதிகமாகலாம். அதே நேரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்த பூஸ்டர் தடுப்பூசிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களிடம் எந்தளவு வரவேற்பு இருக்கும் என்பது வரும் நாட்களில் தெரியும்.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

45 வயது பிரிவினர், 60 வயதை கடந்தவருக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது  என்றனர்.
Tags:    

Similar News