உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் 45 தீர்மானங்கள்

Published On 2022-04-01 12:38 IST   |   Update On 2022-04-01 12:38:00 IST
கரூர் மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் :

கரூர் மாநகராட்சியின் முதல் சாதாரணக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் கவிதா  தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் பசுவை சக்திவேல், ஸ்டீபன்பாபு, குழுத் தலைவர்கள் சக்திவேல், அன்பரசன், ராஜா, கனகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி  பேசினர்.

கூட்டத்தில் மேயர் கவிதா 23 தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது மகளிருக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50  சதவீத இடஒதுக்கீடு செய்து கொடுத்த முதல்வருக்கு நன்றி என்ற தீர்மானத்திற்கு அ.தி.மு.க. வார்டு  உறுப்பினர்கள் தினேஷ், சுரேஷ் ஆகியோர் இது அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  சட்டம் எனக்கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

ஆனால், மேயர் கவிதா தொடர்ந்து தீர்மானங்களை வாசித்துக் கொண்டே இருந்ததால், இருவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் மேயர் கொண்டு வந்த 23  தீர்மானங்கள் உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து அவசர தீர்மானம்  கொண்டு வந்த மேயர், அதில் கரூர் மாநகராட்சி முதல் கூட்டம் நினைவாக முதல்வர்  மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, மேயர், துணை மேயர், மாமன்ற  உறுப்பினர்கள், அலுவலர்கள் பெயர் தாங்கிய கல்வெட்டு நுழைவு வாயில் மற்றும் மாமன்ற கூட்ட  அரங்கில் பதிக்க இம்மன்றம் தீர்மானிப்பதாக தெரிவித்தார்.

Similar News