உள்ளூர் செய்திகள்
விசைத்தறி

ராஜபாளையத்தில் பஞ்சு விலை உயர்வால் பேண்டேஜ் உற்பத்தி தொழில் கடும் பாதிப்பு

Published On 2022-03-31 09:51 IST   |   Update On 2022-03-31 09:51:00 IST
மத்திய அரசு உடனடியாக பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் பேண்டேஜ் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் பேண்டேஜ் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய இடம் வகிக்கின்றது.

சமீப காலமாக இந்தியா முழுவதும் பருத்தி, பஞ்சு, நூல் விலை கடுமையான ஏற்றம் காரணமாக தற்போது கடுமையான சரிவை பேண்டேஜ் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

கடந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு வரை 356 கிலோ கொண்ட நூல்கண்டு ஒன்றுக்கு ரூ.56,000 வரை இருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாத காலத்திற்குள் கண்டு விலை ரூ.90,000 எட்டியுள்ளது.

இந்த விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் எனவும், பஞ்சு விலையை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயத்தை மாற்றி அமைக்கலாம் எனவும் இப்பகுதியைச் சேர்ந்த பேண்டேஜ் உற்பத்தி தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் விசைத்தறிகளில் பேண்டேஜ் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்துதான் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 3 மாத காலத்திற்கு முன்பு பேண்டேஜ் அனுப்புவதற்கு ஆர்டர் எடுத்த நிலையில் அந்த விலையிலிருந்து கடுமையான விலை உயர்ந்து தற்போது அதே விலைக்கு சரக்குகளை அனுப்ப இயலாத நிலை உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால் இந்த தொழிலில் கடுமையான பாதிப்பு இருக்கும் எனவும், சாதாரண ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பேண்டேஜ் விலை உயர்வால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற பொதுமக்கள் இந்த விலை உயர்வால் மேலும் சிக்கலைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும், மாநில அரசு மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் தந்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் இப்பகுதி தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News