உள்ளூர் செய்திகள்
கூட்டம்

நகராட்சி கூட்டத்தை நடத்திய எம்.எல்.ஏ.

Published On 2022-03-30 17:28 IST   |   Update On 2022-03-30 17:28:00 IST
விருதுநகரில் நகராட்சி கூட்டத்தை எம்.எல்.ஏ. நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
விருதுநகர்

விருதுநகர்  நகரசபை கூட்டம் அதன் தலைவர் மாதவன்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  துணைத்தலைவர் தனலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டுமென தமிழகஅரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

அவருக்கு நகராட்சி தலைவருக்கு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டு அதில் அமர்ந்து இருந்தார். அதேநேரம் துணைத்தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர்கள் வரிசையில் அமரவைக்கப்பட்டார். 

இதுதொடர்பாக சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதனைத்தொடர்ந்து துணைத்தலைவர் தனலட்சுமிக்கு நகராட்சித்தலைவர் அருகே இருக்கை வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும், சீனிவாசன் எம்.எல்.ஏ., தான் பதிலளித்தார். இதனால் அவர்தான் கூட்டத்தை நடத்துவது போன்ற நிலை ஏற்பட்டது. நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பார்வையாளர்களாக மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிலை மாறி அவர் கூட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

கூட்டத்தில் 19தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Similar News