உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது நில மோசடி வழக்கு
விருதுநகரில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது நிலமோசடி, கொலைமிரட்டல் வழக்கு போடப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 44). இவர் சாத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ராமுதேவன்பட்டியை சேர்ந்த நல்லதம்பி (55) என்பவர் தனது மனைவியின் பெயரில் உள்ள நிலத்தை விற்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த நிலத்துக்கு தொகை பேசி அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை நல்லதம்பியிடம் கொடுத்தேன்.அதன்பின் அந்த நிலத்தின் உரிமை குறித்து விசாரித்தபோது நல்லதம்பி ஏற்கனவே அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் முன்பணத்தை திருப்பி தருமாறு நல்ல தம்பியிடம் கேட்டேன்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தார். இதற்கு உடந்தையாக கோட்டையூரை சேர்ந்த தங்கதுரை (42) என்பவரும் இருந்தார். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட போலீ சாருக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில் நல்லதம்பி, தங்கதுரை ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மோசடி புகாரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நல்லதம்பி அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஆவார். அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.